March 4, 2022 தண்டோரா குழு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 இடங்களில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.ஒரு வார்டில் சுயேட்சையும், 3 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.இவர்களது பதவி ஏற்பு விழா கடந்த 2 ஆம் தேதி நடந்தது.
இந்நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை 9 மணிக்கு கோவை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் 19 வது வார்டு திமுக கவுன்சிலர் கல்பனா போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் மாநகராட்சியின் 6 வது மேயர் ஆகும்.
காலை சரியாக பத்து மணிக்கு அவர் அங்கி அணிந்து மேயர் இருக்கையில் வந்து அமர்ந்தார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளி செங்கோல் மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இதன் தொடர்ச்சியாக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், மருதமலை சேனாதிபதி,பையா ஆர் கிருஷ்ணன்,முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி,முன்னாள் மேயர்கள்,ராஜ்குமார்,காலனி வெங்கடாசலம் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.மற்ற 97 கவுன்சிலர்களும் இதில் பங்கேற்றனர்.