March 21, 2017 tamilsamayam.com
வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிட காரணம், அஜித் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான் காரணம் என விநியோகஸ்தர் நரேந்தரன் தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியான வீரம் படம் தெலுங்கில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். வரும் 24-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. கட்டமராயுடு படத்திற்கான தமிழக வெளியீட்டு உரிமையை நாகா மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 150 திரையரங்குகளில் நேரடி தெலுங்கு படமான ‘கட்டமராயுடு’ படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகமான தியேட்டர்களில் கட்டமராயுடு படத்தை திரையிட, அஜித் ரசிகர்களின் ஆதரவே காரணம் என நாகா மூவிஸ் நிறுவன தலைவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார். “இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் அஜித் ரசிகர்கள் தான். இந்த படம் வீரம் படத்தின் ரீமேக் என்பதால், படத்தை பிரபலப்படுத்த அஜித் ரசிகர்கள் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பவன் கல்யாணுக்கென குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இது அஜித் சாரின் படம் என்பதால், அவரின் ரசிகர்களும் படத்தை பார்க்க விரும்புகிறார்கள். எனவேதான் தைரியமாக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.” என நரேந்திரன் தெரிவித்துள்ளார்.