December 27, 2018
தண்டோரா குழு
இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை. தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் இதுவரை வெளியான வீரம், வேதாளம் படத்திற்கும் U சான்றிதழ் தான் வழங்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. அந்த வகையில் விஸ்வாசம் படமும் வெற்றி படமாக அமையும் என தல ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.
அதைபோல், காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்றது. இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் இசை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே இரு படங்களும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகின. எனினும் எந்த தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையில் தல அஜித் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 10ம் தேதி இரு படங்களும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.