October 31, 2018 தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். சர்கார் கதையும் செங்கோல் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார். படத்திற்கான கதை என்று டைட்டில் கார்டில் நன்றி ராஜேந்திரன் என்று குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், ஏ.ஆர். முருகதாஸ் கதையை திருடியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி இதுகுறித்து பேசும்போது, மொத்தமே 7 விஷயங்கள் தான் கதையில் இருக்கிறது. அதைத்தான் சினிமாவில் மாற்றி மாற்றி எடுத்து வருகிறோம். இதை கதை திருட்டு என்று சொல்வதே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. “யாரோ ஒருவருக்கு தோன்றும் கதை மற்றொருவருக்கு தோன்றுவதில் தப்பில்லை. நான் ஒருநாள் சிவகார்த்திகேயனை அழைத்து கதை சொன்னேன். அந்தக் கதை சிறு சிறு மாற்றங்களுடன் ரஜினி முருகன் படமாக உருவாகி வருவதாக அவர் என்னிடம் கூறினார். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. படத்தின் இயக்குநரை அழைத்துப் பேசி அந்தப் படத்தில் நானே நடித்தேன். இதுபோன்ற பிரச்னைகளில் மாற்றி மாற்றி முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளக்கூடாது. பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை இவ்வளவு தூரம் எடுத்துச் சென்றதில் எனக்கு உடன்பாடில்லை” எனக் கூறியுள்ளார்.