July 27, 2017
தண்டோரா குழு
விஷால் – கார்த்தி நடிப்பில் உருவாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் தற்போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சாயிஷா சைகல் ஆகியோரது நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2 நாட்கள் மட்டுமே நடந்தன. அதற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. மேலும், ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக விஷால் கால்ஷீட் கொடுத்துள்ளார். நடிகர் கார்த்தி, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதனால் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.
இந்தப் படம் பற்றி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரித்த போது, “இந்தப் படம் சில சிக்கல்களில் இருப்பதால் கைவிடப்பட்டது உண்மை தான். விஷால் மற்றும் கார்த்தி இருவரையும் தவிர்த்து, வேறு இரண்டு நாயகர்களுடன் இப்படத்தைத் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இக்கதையை மறைந்த இயக்குநர் சுபாஷ் எழுதியது. மேலும் படத்தில் வேறு எந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம், அத்துடன் படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளாரா? என்பது பற்றியெல்லாம் இன்னும் முடிவாகவில்லை” என்றார்.
ஆகமொத்தம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் விஷாலும், கார்த்திக்கும் நடிக்கவில்லை என்றே தெரிகிறது.