October 24, 2017 tamil.samayam.com
ஜி.எஸ்.டிக்கு எதிராக பேசிய மெர்சல் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டிக்கு எதிரான வசனங்களால் பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். படத்தில் இடம்பெற்றவை தவறான கருத்துக்கள் என்றும், உடனடியாக அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்திற்கு தடை கேட்டு, வழக்கறிஞர் அஸ்வத்தாமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனுவில், மெர்சல் படத்தில் தேச தேச ஒற்றுமை, இறையாண்மைக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து தவறான கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த 20ஆம் தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினேன்.
முன்னதாக அப்பாஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கருத்து சுதந்திரம் என்பது பணம் சம்பாதிக்க திரைப்படத்துறையினருக்கு வழங்கப்பட்ட உரிமமாக கருதக்கூடாது. மற்றவற்றை விட பல மடங்கு அதிக தாக்கத்தை திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் உருவாக்குகின்றன’ என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மெர்சல் படத்திற்கு சென்சார் கேட்டு, கடந்த 16ஆம் தேதி விண்ணப்பித்த நிலையில், ஒரே நாளில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு, மெர்சல் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு வழங்கப்பட்ட ‘சென்சார்’ சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று சென்சார் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.