December 27, 2018
தண்டோரா குழு
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைபடமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க இயக்குனர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை ஏ.எல். விஜய் இயக்கவுள்ளார் என்று அண்மையயில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. இப்படத்தை விஸ்ணு வர்தன் இந்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார். இவர் கபில் தேவ் மற்றும் என்.டி.ஆர் வாழ்கை வரலாற்று படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் ப்ரீபுரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறதாம்.தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.