September 26, 2019 தண்டோரா குழு
‘ரெமோ’ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுல்தான்’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது திண்டுக்கல்லில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மலைக்கோட்டை பகுதியில் ‘சுல்தான்’ படப்பிடிப்பு நடைபெற்ற போது இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,இப்படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதனை திண்டுக்கல், மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாதெனவும் கூறி ஒரு அமைப்பினர் செப்டம்பர் 24-ம் தேதி படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களைத் தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதைக் காண்பிக்கக் கூடாதென்பதை உறுதி செய்யத் தணிக்கைக் குழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம். நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், வரலாற்றுத் தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் சாதி, மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்”.
இவ்வாறு ட்ரீம் வாரியர் நிறுவனம் தெரிவித்துள்ளது.