March 14, 2019 தண்டோரா குழு
‘பாகுபலி’ என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பின் இந்தியாவின் முன்னணி இயக்குநராக ராஜமௌலி மாறினார். இதனால், இவர் அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்ஷன் திரில்லரான படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக இப்படத்தில் நடிக்கின்றனர். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ ( RRR) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், இப்படம் எப்போது வெளியிடப்படும் என்றும் இந்த படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படம் 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் தமிழ் திரைப்படநடிகர் சமுத்திரகனி, ஹாலிவுட் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ், ஆலியா பட், அஜய் தேவ்கான் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இந்த படம் பாகுபலி போல இரண்டு பாகம் கிடையாது ஒரே படம்தான் என இயக்குநர் ராஜ மெளலி கூறியுள்ளார்.