June 11, 2018 தண்டோரா குழு
கேரளாவில் மலையாள நடிகர் மோகன்லால் மலையாளத் திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் சங்கத்தலைவராக கடந்த 17 வருடங்களாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் இன்னசெண்ட் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாள் தொடங்கி இன்றுவரை நடிகர் நடிகைகளின் பல்வேறு பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சாலக்குடி தொகுதி எம்.பி ஆகவும் உள்ளார்.
இன்னசெண்ட் மலையாள நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் கூட அதை திறமையாக கையாண்டு திலீபனை பிடிக்க செயல்பட்டார்.இந்நிலையில் இன்னசெண்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நடிகர் சங்க தலைவர் பொறுப்பு பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். மேலும் விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதுவரை அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து விரைவில் நடிகர் மோகன்லால் “அம்மா” நடிகர் சங்கத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.