May 17, 2018
தண்டோரா குழு
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை சவுந்தர்யா. பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்த இவர் ரஜினிக்கு ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அதைபோல் கமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம் படங்களிலும் நடித்துள்ளார்.
2004-ல் பெங்களூரு அருகே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது விமான விபத்தில் இறந்தார். இவர் கடைசியாக பி.வாசு இயக்கிய ஆப்தமித்ரா கன்னட படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை கதை ‘நடிகையர் திலகம்’ பெயரில் தயாராகி திரைக்குவந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி அறிவித்து உள்ளார். சவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை மற்றும் இயக்குனர் தேர்வு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.