April 10, 2019 தண்டோரா குழு
தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் திரைபடமாக உருவாகி வருகிறது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கும் இப்படத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 12 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இதற்கிடையில்,தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, மோடியின் பயோபிக் படம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்து வந்தன. மோடியின் பயோபிக் திரையிடப்பட்டால், அது வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் அமையும் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அதைபோல் பயோபிக் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இதனால் இப்படம் நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரையில் மோடியின் பயோபிக் திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவருவது வாக்காளர்களின் மனநிலையை மாற்றும். இதனை எலக்ட்ரானிக் மீடியாவில் வெளியிடக்கூடாது எனக் கூறியுள்ளது.