November 17, 2018 தண்டோரா குழு
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,மின்சாரக் கனவு படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன.விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.
இதற்கிடையில்,இப்படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.அதேசமயம்,ராஜீவ் மேனனுக்கு நெருக்கமான திரைத்துறை நண்பர்களுக்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இப்படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில்,”நேற்று இரவு ஜீவியின் அன்பு அழைப்பின் பேரில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை காண வாய்ப்பு கிட்டியது.இசை திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம்.WHIPLASH என்ற ஆங்கில திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு.குரு சிஷ்ய உறவை மையமாக கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிக கடினமான காரியம்.அப்படத்திற்கு கதை எழுத ஆழமான இசையறிவு தேவை.
இசைக்குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் மேனன் அவர்கள் இந்த கதையை மிக அழகாக,ஆழமாக,நுட்பமாக,சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடிவேணு மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார்.தேசிய விருது காத்திருக்கிறது.ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார்.
ஜீவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார்.அவர் கண்களில் தெறிக்கும் பதின்வயது குழப்பம், பதட்டம்,தடுமாற்றம்,அழுகை,வெறி,ஏக்கம்,காதல்,குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார்.ஜீவி தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது.வாழ்த்துகள் ஜீவி என பதிவிட்டுள்ளார்.