April 14, 2017
tamilsamayam.com
சீனு ராமசாமி இயக்க உள்ள புதிய படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தர்மதுரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இயக்குநர் சீனு ராமசாமி பிசியாக உள்ளார். இந்நிலையில் சீனு ராமசாமியின் அடுத்த படத்தை, யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான “ YSR ஸ்டூடியோஸ்” தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர் காலம்’ என்ற படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார்.
தர்மதுரை படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே, சீனு ராமசாமியின் புதிய படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பும் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு வெளியான விஷ்வ துளசி என்ற படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஷ்வநாதனுடன் இணைந்து இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.