April 7, 2017 tamilsamyam.com
பிரபல நடிகர் அமிர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தை பாகிஸ்தானில் வெளியிட அமிர்கான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் ‘மகாவீர் போகாத் சகோதரிகள்’ கெத்தா-பபிதாவின் வாழ்க்கையை மையாக வைத்து எடுப்பட்ட படம் ‘தங்கல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு சுமார் ரூ.385 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இப்படம் பாகிஸ்தானில் வெளியாக அந்நாட்டு தணிக்கை குழு இந்திய தேசியக் கொடி மற்றும் இந்திய தேசிய கீதம் இடம்பெறும் 2 காட்சிகளை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இப்படத்தை பாகிஸ்தானில் வெளியிட வேண்டாம் என அமீர்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ‘தங்கல்’ திரைப்படத்தை வெளியிட பல விநியோகஸ்தர்களும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், பாகிஸ்தான் தணிக்கைக்குழு காட்சிகளை கத்தரிக்க வேண்டும் எனக் கூறியதையடுத்து,பாகிஸ்தானில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் தணிக்கைக்குழு கத்தரிக்க சொன்ன 2 காட்சிகளும், படத்தின் கிளைமேக்சில் வெற்றியின் தருணத்தை கொண்டாடும் போது இடம்பெறும் காட்சிகள் ஆகும்.விளையாட்டு வீராங்கனை பற்றிய கதையில் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் அந்த தருணத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என அமிர்கானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும்,இது நாட்டுவெறி என்று அல்ல எனவும் இது தான் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் என்று கூறினார்.அதைப்போல் பாகிஸ்தான் தணிக்கையின் கோரிக்கை ஏற்றுக் கொள்வதாக இல்லை என்ற காரணத்தால் படத்தை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.