December 30, 2017 தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 26ம் தேதி முதல் தமது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். 5வது நாளான இன்று சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது,ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி,தாம் மெட்ராஸ்காரன் என்றும்,1973ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து வருவதாக கூறினார்.அக்காலக் கட்டத்தில் மதராஸ் என்றால் கர்நாடகத்தில் உயர்வாக பேசப்பட்டது.வாழ்க்கையில் குறுக்கு வழியில் செயல்பட நினைத்தால் எதுவும் நிலைக்காது.நாம் கண்ட கனவு நனவாகவில்லை என்றால் அதற்காக வருந்தக் கூடாது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில்,ரசிகர்களின் பிரார்த்தனையே என்னை காப்பாற்றியது.“நடிப்பு,அரசியலெல்லாம் வேண்டாம் நீங்கள் உயிருடன் வந்தால் போதும்”என்ற ரசிகர் ஒருவரின் கடிதம் என்னை கண்கலங்க வைத்தது.
இயக்குநர் பாலச்சந்தர் எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து ஒரு மகனாக என்னை தத்தெடுத்து வளர்த்தார்.தமிழ் கற்றுக்கொள் உன்னை பெரிய ஆளாக மாற்றுகிறேன் என இயக்குனர் பாலச்சந்தர் என்னிடம் கூறினார்.
2.O பெரிய அளவில் பேசப்படும்.கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி 2.O வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலா படத்தில் வித்தியாசமான ரஜினியை காண்பித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். காலாவுக்கு பிறகு என்ன என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும்.இன்னும் ஒருநாள் காத்திருங்கள்; நாளை எல்லாம் தெரியவரும்.இவ்வாறு ரஜினி பேசினார்.