January 28, 2017
tamilsamayam.com
பிரபல இந்தி சினிமா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜ்புத் இனத்தவர் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோன், ஷாஹித் கபூர் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி, எழுதி, இசையமைத்து இயக்கும் புதிய படம் பத்மாவதி. இந்த படம், டெல்லி சுல்தான் அடிமை வம்சத்தைச் சேர்ந்த அலாவுதீன் கில்ஜி, மேவார் இன ராணி பத்மினியை அடைவதற்காக, அவரது நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பத்மாவதி படத்திற்கு, ராஜ்புத் இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பத்மாவதி படத்தை, ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியில் செட் போட்டு, சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பு நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று திடீரென அங்கு நுழைந்த ராஜ்புத் சமூகத்தினர் சிலர், சஞ்சய் லீலா பன்சாலியை சராமரியாக தாக்கினர். மேலும், பத்மாவதி படத்தின் செட்டை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
உடனடியாக, அங்கிருந்த படக்குழுவினர் தலையிட்டு, பன்சாலியை காப்பாற்றினர். இதையடுத்து, போலீசார் அங்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், வன்முறை கும்பல் கலைந்து சென்றது.