October 27, 2018 தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்,முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது.இந்நிலையில், சர்கார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் திரைக்கதை தன்னுடையது என்றும் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து,சர்க்கார் படத்துக்கு தடை கோரிய வழக்கில் சர்கார் படத்துக்கு தடைவிதிக்க இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது.அக்.30க்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ்,தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில்,கடந்த 2007ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட உதவி இயக்குநர் வருணின் செங்கோல் படக்கதையும்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள “சர்கார்” படக்கதையும் ஒன்று தான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் முருகதாஸ் முதன்முறையாக இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்,
“ நடிகர் விஜய்யுடன் நான் மட்டுமல்ல இயக்குநர் பணியாற்றினாலும் பிரச்ச்னை வருவது இயல்புதான்.பாக்யராஜ் சொல்வது ஒருதலைபட்சமாக இருக்கிறது. என்னுடைய முழுக் கதையை அவர்கள் படிக்கவில்லை.இந்த விவகாரத்தில் என்னுடைய முழுக்கதையை நான் பாக்யராஜிடம் சமர்பிக்கவில்லை.என்னுடைய மூலக் கதையை மட்டுமே அவர்கள் படித்திருக்கிறார்கள்.‘செங்கோல்’ முழுக்கதையை படித்தது போல் என்னுடைய முழுக்கதையையும் படித்திருக்க வேண்டும் அல்லவா?சமகால அரசியலையும் முதல்வர் இறந்ததற்குப் பின்னால் நடந்த அரசியலையும் மையப்படுத்தி படம் எடுத்துள்ளேன்.
இதை எப்படி 2007-ம் ஆண்டு செங்கோல் கதையில் எழுத முடியும்.செங்கோல் கதையில் சிவாஜி கணேஷனின் வாக்கை கள்ள ஓட்டாக போடுகின்றனர்.சர்கார் படத்தில் சுந்தர் பிச்சை போன்று வெளிநாட்டிலிருக்கும் ஒருவரது வாக்கை கள்ள ஓட்டாக போடுகின்றனர்.இந்த ஒரு சம்பவத்தின் ஒற்றுமை மட்டுமே எப்படி கதை திருடப்பட்டுவிட்டது என்று சொல்வதில் சரியாக இருக்கும்.இவ்வளவு பெரிய தண்டனையை ஏன் கொடுத்தீர்கள்.அப்படி நான் என்ன செய்தேன்.
இந்தக் கதையை சொந்தம் கொண்டாடும் வருண் என்ற ராஜேந்திரனை நான் இதுவரை நேரில் பார்த்ததும் இல்லை இணைந்து பணியாற்றியதுமில்லை.அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.ஸ்டில் கேமிராமேனிடம் சொல்லி இந்தக் கதையை நான் திருடிவிட்டதாக சொல்கிறார்கள்.ஒரு ஸ்டில் கேமிராமேனிடம் (ஸ்டில்ஸ் விஜய்) யாராவது கதை கேட்பார்களா?
இந்த விவகாரத்தில் ஒரு புகைப்படக் கலைஞரின் மூலம் தான் திருடப்பட்டதாக புகார் சொல்லப்படுகிறது.அப்படியெனில் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் ஸ்டில்ஸ் விஜய்யை ஏன் நேரில் அழைத்து விசாரிக்கவில்லை. இதற்கு பாக்யராஜ் மற்றும் குழுவினர் எனக்கு பதிலளிக்க வேண்டும்.கதை தன்னுடையது என்று கூறும் வருண் ராஜேந்திரன் பாக்யராஜ் உடன் பணியாற்றியவர் அதனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
இதுமுழுக்க முழுக்க எனது உழைப்பு,எனது குழுவின் உழைப்பு,இதுபோன்ற பிரச்னைகளால் நான் சினிமாவிலிருந்தே வெளியேறிவிடுவதாகவும் முடிவெடுத்தேன். எனது நண்பர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
அப்போது தொகுப்பாளர் இந்த விவாகாரம் குறித்து விஜய் ஏதாவது கூறினாரா என கேட்டார்.அதற்கு முருகதாஸ்,இந்த விவகாரத்தை நடிகர் விஜய்யிடம் கொண்டு செல்லவில்லை.என்னைப் பொறுத்தவரை எனக்கு பிரச்னைகள் வரும்போது யாரிடமும் உதவி கேட்க மாட்டேன்.அவரை தர்மசங்கடத்தப் படுத்தக் கூடாது.இந்த விஷயத்தில் விஜய்யிடம் நான் எதுவும் பேசவில்லை.அவர் மட்டுமல்ல யாரிடமும் நான் எனது பிரச்னையை சொல்லவில்லை.இந்தப் பிரச்னையை நானும் எனது குழுவும் எதிர்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.