May 23, 2017 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலகர் சௌந்திரவேல் மீது பத்திரிக்கை நிரூபர் என்ற பெயரில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதல் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காரமடையை சேர்ந்த கிட்டான் என்பவர் கடந்த 11ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதையடுத்து அவரது உடல் 5 நாட்களாக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு பின்னர் மருத்துவக்கல்லூரி அனாட்டமி துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அவரது உடலை வாங்குவதற்கு வந்த அவரது உறவினர்கள் தங்கள் உறவினரான கிட்டுசாமியின் உடலை தருமாறு கோரியுள்ளனர்.ஆனால் கிட்டுசாமி என்ற நபர் தங்கள் மருத்துவமனையில் உயிரிழக்கவில்லை எனவும் கிட்டான் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்டவரே உயிரிழந்தார் எனவும் இருப்பிட மருத்துவர் சௌந்திரவேலு கூறியுள்ளார். மேலும், வருவாய் துறை அதிகாரிகளிடம் உரிய பெயர் சான்று பெற்று வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்களில் ஒருவர் தான் ஒரு பத்திரிக்கை நிரூபர் எனவும் அக்கினி கதிர் என்ற பத்திரிக்கையில் பணியாற்றுவதாகவும் கூறி இருப்பிட மருத்துவர் சௌந்தரவேலுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவரது செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இச்சம்பவம் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவரை தாக்கி தப்பியோடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் நிரூபர் என்ற போர்வையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து கோஷங்களையும் எழுப்பினர்.
100 க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது