October 14, 2017 தண்டோரா குழு
உச்சநீதிமன்றம் அனுமதித்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் சபரிமலைக்கு வர மாட்டார்கள் என்று கூறி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,கோட்டையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன்,
சபரிமலையில் வழிபாடு மற்றும் பாதுகாப்பு இரண்டும் மிகவும் முக்கியம். 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலையில் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும், கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அங்கு வர மாட்டார்கள்.சபரிமலையை ஒரு தாய்லாந்தாக மாற்ற யாரும் முயற்சிக்க வேண்டாம் என கூறினார்.
அவருடைய இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. எனினும் பிரையார் கோபால கிருஷ்ணனுக்கு ஆதரவாக சில கேரள பெண்ணுரிமை அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மனு அரசியல் அமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள றிலையில் சபரிமலையில் பெண்களின் பிரவேசம் குறித்து விவாதம் சூடுபிடித்துள்ளது.