December 4, 2018
தண்டோரா குழு
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அதன் உரிமையாளர் சஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் இருக்கக்கூடிய தில்லைநகர் 4வது தெருவில் தனியாக ஒரு வீட்டில் முழு தளத்தையும் வாடகைக்கு எடுத்து அதில் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இங்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்த விடுதியை கடந்த ஒரு ஆண்டாக திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் நடத்தி வந்தார்
இதற்கிடையில், சஞ்சீவ் அவ்வப்போது பராமரிப்பு பணி இருப்பதாக கூறி அடிக்கடி விடுதிக்குள் சென்று குளியல் அறைகள், படுக்கை அறைகள் வரை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இது போல் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகளால் பெண்கள் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து அறையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதை கண்டறிவதற்காக தங்கள் செயல்போன்களில் இருந்து Hidden Camera Detector என்ற செயலி மூலம் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் குளியல் அறைகள், படுக்கை அறைகளை ஆய்வு செய்ததில் 16 கேமராக்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை விடுதியின் உரிமையாளர் சஞ்சீவ்தான் பொறுத்தியிருக்கிறார் என்பதை உறுதி செய்த அந்த பெண்கள், ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் சோதனை நடத்தியதில் படுக்கை மற்றும் குளியல் அறைகளில், ஸ்விட்ச் போர்டு, உடைகளை வைக்கும் ஆங்கர்கள், மின் விளக்குகள் ஆகிய இடங்களில் கண்ணுக்கு தெரியாத அளவு கொண்ட ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சஞ்சீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னையில் வேறு எங்காவது இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறாரா? இவருக்கு துணை போனது யார்? இந்த கேமராக்கள் எப்போது பொருத்தப்பட்டன. இதுவரை படம்பிடிக்கப்பட்ட பெண்களின் அந்தரங்கங்கள் ஆபாச தளங்கில் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்பட்டனவா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது விவகாரம் சென்னையில் மற்ற விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.