January 16, 2017 தண்டோரா குழு
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்தி செய்துவருகிறது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் மற்றும் அவரது மகனும் அம்மாநில முதலவருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து கட்சி நிறுவனர் முலாயம் மற்றும் அவரது மகனும், முதல்வருமான அகிலேஷ் ஆகியோர் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரியிருந்தனர். மேலும், தேர்தல் ஆணையத்திலும் இது குறித்து உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியது. இரு தரப்பினரும் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னமும் , சமாஜ்வாதி கட்சியும் சொந்தம் என தேர்தல் ஆணையம் திங்களன்று அறிவித்தது. அதைப் போல் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவே செயல்படுவார் என்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் அகிலேஷின் தந்தை முலாயம் சிங் ஏமாற்றத்தில் உள்ளார். இதற்கிடையில் லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலத்தில் தனது ஆதரவாளர்களிடையே திங்களன்று பேசிய முலாயம் சிங் யாதவ், “சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் என்ன தீர்ப்பு அளித்தாலும், என்னையும் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.