August 31, 2017 தண்டோரா குழு
ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் தமிழக அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,
செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் தங்களுடைய அசல் (ஒரிஜினல்) ஓட்டுநர் உரிமத்தை கைவசம் வைத்திருக்க வேண்டுமென்றும், காவல்துறையினர் சோதனையின் போது அசல் உரிமம் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ. 500/- அபராதம் அல்லது 3 மாதம் சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ள பல லட்சம் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும். வாகனம் ஓட்டி பிழைக்கும் தொழிலாளர்கள், வேலைக்கு செல்பவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் என அனைத்துப் பகுதியினரையும் அச்சுறுத்தி வாழ்வுரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத செயலாகும். தொழிலையும், தொழிலாளர்களையும், வேலைக்கு செல்பவர்களையும் பாதிக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையில் வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. தொலைந்து போனாலோ, மழை போன்ற காரணங்களால் சேதமடைந்தாலோ மீண்டும் அசல் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் தங்கள் அசல் உரிமத்தை பணியிடங்களில் ஒப்படைத்த பின்னரே பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.
விதிமீறல் அல்லது சோதனை என்ற பெயரால் இப்போதே வாகனங்களை மறித்து, சாவியை பிடுங்கி ஓட்டுநர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடைமுறை பரவலாக உள்ளது.
காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரையும் பறித்துள்ளது. அரசின் தற்போதைய உத்தரவால் காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள் அதிகரிக்கும். அசல் உரிமத்தை பறித்து ஓட்டுநர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கவும், பழிவாங்கவும், லஞ்சம் – ஊழல் மற்றும் முறைகேடுகள் அதிகரிக்கவுமே உதவிடும்.
எனவே, அசல் ஓட்டுநர் உரிமம் குறித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், தற்போது காவல்துறையினரின் சோதனையின் போது நகல் உரிமத்தை காண்பிக்கும் நடைமுறையே தொடர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.