March 10, 2023 தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமும், ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமுமான, அசோக் லேலண்ட், ஒசூரில் உள்ள தனது ஆலையில்100% பெண் பணியாளர்களை கொண்டு இயக்கக் கூடிய உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், உற்பத்தி துறையில் அதிக அளவில் பெண்களை ஈர்த்து பங்குபெறச் செய்வதற்கும் ஏற்ற வகையில் ஓசூரில் உள்ள தனது ஆலையில் 80 பெண் பணியாளர்களுடன் இந்த உற்பத்தி பிரிவை தொடங்கியுள்ளது.இது வழக்கத்திற்கு மாறுபட்ட வகையில், பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகமுற்றிலும் பெண் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி ஆலையை உருவாக்குவதற்கு அசோக் லேலண்ட் மேற்கொண்டிருக்கும் ஒரு முயற்சியாகும்.
முக்கியமான உற்பத்தி துறைகளில் அவர்களை பயிற்றுவிப்பதற்கும், அவர்களது திறன்களை வளர்த்தெடுப்பதற்கும் அசோக் லேலண்ட் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகளை செய்துள்ளது. இதன் மூலம் புதிய என்ஜின் பிரிவின் ஒட்டு மொத்த உற்பத்தியும் அவர்களுடைய பொறுப்பில் மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய முன்னெடுப்பு குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷெனு அகர்வால் (Mr, Shenu Agarwal, Managing Director& CEO, Ashok Leyland) கூறுகையில்,
அசோக் லேலண்டில், பன்முகத்தன்மைக்கும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அம்சங்களுக்கும் நாங்கள் எப்பொழுதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். பால், இன பேதமின்றி அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கிவருகிறோம். பெண்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதன் மூலம், அவர்களின் வாழ்க்கை மட்டுமின்றி,அவர்களைச் சார்ந்த குடும்பம், சமூகம் ஆகியற்றையும் மேம்படுத்தும் என நம்புகிறோம். இந்த முயற்சியானது “இலக்கு தொலைவில் இல்லை”(Koi Manzil Door Nahin) என்ற எங்கள் பிராண்டின் கொள்கைக்கு ஏற்ற வகையில் உள்ளது. அதற்கேற்றாற் போல, பெண்களின் ஆற்றலை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின்கனவுகளை நனவாக்குவதை நாங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளோம்.
அசோக் லேலண்டில், மிக சிறந்த முறையில் பாலின சமத்துவத்தை பேணவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இது போன்ற முன்முயற்சிகள்நாம் வாழும் சமூகத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சிறப்பான சூழலை உருவாக்குகிறது”என்றார்.
வளர்ந்து வரும் இலகுரக வர்த்தக வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய P15 Engine Module (அசெம்பிளி மற்றும் பரிசோதனை) பிரிவானது H1 யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளது, நாளொன்றுக்கு இரண்டு வேளை பணி சுழற்சி வாயிலாக இயங்குவதன் மூலம், இந்த புதிய உற்பத்தி பிரிவு ஆண்டுக்குசுமார் 62 ஆயிரம் என்ஜின்களை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது.