December 22, 2022 தண்டோரா குழு
கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்தவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஐந்தாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களின் கேள்விகளுக்கு பதல் அளித்து பேசியதாவது: என் பெற்றோர் மருத்துவம் படிக்க வலியுறுத்தினார்கள் அதனால் தான் மருத்துவம் படித்தேன். பின்னர் எனது ஆசைக்கு அரசியலுக்கு வந்து கவர்னர் ஆனேன்.
வாழ்க்கையில் முன்னேறி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்தேன் அதனால் கவர்னர் ஆனேன். நன்றாக படித்தால் நாம் நினைக்கும் பொறுப்பில் வரலாம். கவர்னராகவில்லை என்றால் வேறு என்ன ஆகியிருப்பேன் என்றால் நல்ல மனிதராக வாழ்ந்து இருப்பேன். எனது ரோல் மாடல் அம்மா, அப்பா பின்னர் டீச்சர். தற்போது உள்ள ரோல் மாடல் பிரதமர் மோடி தான். இவ்வாறு அவர் மாணவர்களிடம் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது:
குழந்தைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல பிரதமர் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளார்.அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.அதற்கு நாம் பாடுபடுவோம். சிபிஎஸ்சி பாடத்திட்டம் குழந்தைகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும். புதுச்சேரியை பொருத்தமட்டில் தமிழ் வழி பாட கல்வி, மலையாள பாட கல்வி, ஆந்திர வழிபாட கல்வி என மூன்று விதமான பாடக் கல்வி உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கருத்தை உறுதியாக மறுக்கிறேன். சமமான கல்விக்கு இந்த முடிவை எடுத்துள்ளோம். சிபிஎஸ்இ பற்றி அரசியல்வாதிகள் ஏதும் சொல்ல வேண்டாம். மூளை ஏற்றுக் கொண்டாலும் குழந்தைகளை நாம் மற்ற மொழியை படிக்க விடுவதில்லை. நாரயணசாமி காட்டமாக பேசும் பொழுது காட்டு காட்டு என்று காட்ட தான் செய்வார்.
நாராயணசாமி ஆட்சியில் நல்ல கல்வியை கொண்டு வர முடியவில்லை. ஆகவே அவரது குற்றச்சாட்டை நான் புறம் தள்ளுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலையின் வாட்ச் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘‘எல்லாவற்றையும் நான் வாட்ச் பண்றேன்,’’ என நகைச்சுவையாக தமிழிசை பதல் அளித்தார்.