May 5, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரம் அருகே திவான்பகதூர் சாலையில் ரூ.40.78 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் 49 நான்கு சக்கர வாகனங்கள், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்களில் தலா 81 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 373 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம். பார்வையாளர்கள் அறை, மின்மாற்றி அறைகள், மின்சாதன கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர்கள் ஓய்வு அறை, கழிப்பிடங்கள், வாகன பராமரிப்பு அறை ஆகியவை உள்ளன. இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அண்ணா நகர் மார்க்கெட் மற்றும் எம்ஜிஆர் மார்க்கெட் ஆகிய இரண்டையும் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் அருகே 6 ஏக்கர் நிலப்பரப்பில் மாற்றுவது தொடர்பாகவும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து புல்லுக்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சில்லரை மீன் விற்பனை அங்காடியையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாநகராட்சி துணை கமிஷனர்கள் ஷர்மிளா, சிவகுமார், உதவி கமிஷனர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.