January 3, 2017 தண்டோரா குழு
கிராமப்புற பகுதிகளில், தேவைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்பகுதி மக்களுக்குத் தேவையான அளவு ரூபாய் நோட்டுகள் கிடைக்க 40 சதவீத நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
வங்கிகளுக்கான அறிவுரைகள்:
கிராமப்புற வங்கி கிளைகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அணுகுமுறை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட சதவீதம் ரூபாய் நோட்டுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வங்கி கருவூல மையங்களும் ரூ. 500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும்.
தேவைக்கேற்ப ரூ.100 நோட்டுகள் வழங்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப நாணயங்களைத் தருவித்து, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.