February 6, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்பின் வாசகம் கொண்ட தொப்பியை அணிந்த மாணவனை மற்ற மாணவர்கள் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்கா மிஸௌரி மாநிலத்தில் நடந்திருக்கிறது. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் விடியோவில் பதிவாகி, வைரலாகப் பரவி வருகிறது.
அமெரிக்க அதிபராக பொறுபேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல பிரசாரத்தின் போது ‘அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் உயர்த்திடுவோம்’ என்று கூறினார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றிவாகை சூடி, அதிபராகவும் பதவியேற்றார்.
ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது மெக்ஸிகோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அத்துடன் நில்லாமல் அதிபராகப் பதவியேர்ற பிறகு பிரசாரத்தின்போது கூறியதை செயல்படுத்தத் தொடங்கினார். இது போன்ற செயல்கள் அமெரிக்க மக்களிடையே வெறுப்பைத் துண்டியுள்ளன. மக்கள் டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
இத்தகைய நிலையில், “அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் உயர்த்துவோம்” என்று எழுதியிருந்த தொப்பியை அணிந்து கொண்டு பள்ளி வாகனத்தில் இருந்த கேவின் என்ற 12 வயது மாணவனை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
கேவின் மிஸெளரி மாநிலத்தில் உள்ள பார்க்வே மாவட்டப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன். அவன் டொனால்ட் டிரம்ப் வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்தான். அதைக் கண்ட இதர மாணவர்கள் கேவினை நோக்கி, “சுவர் கட்ட விரும்புகிறாயா?” என்று கூறியபடி தாக்கினர். மாணவர்கள் தாக்கிய காட்சி காணொளியில் வெளியானது.
இச்சம்பவம் குறித்து, கேவின் கூறுகையில், “பள்ளி வாகனத்தில் பயணம் செய்த போது, ஒரு மாணவன் என்னை கீழே தள்ளி அடித்தான். பிறகு வாகனத்தின் ஜன்னல் அருகே மீண்டும் தள்ளினான். வேறு வழியில்லாமல் அவனைத் தள்ளிவிட்டேன்” என்றான்.
பார்க்வே பள்ளி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இதற்கு காரணமான மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு இடையே அமைதியான புரிதலைக் கற்றுக்கொடுக்க வழிவகுத்து வருகிறோம்” என்றார்.