December 2, 2022
கோவையில் சாலை வசதிகள் வேண்டி அதிமுக சார்பாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இப்போராட்டத்திற்கு தலைமை வகித்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இப்போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் கைவிடப்பட்டு வருகின்றன. மக்கள் படுக்கின்ற துன்பங்கள், வேதனைகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சொத்துவரி உயர்வு, சாலை வசதிகள் இல்லாதை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு முதலீட்டு தொகை கொண்டு வரப்பட்டதா. பெரிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. அம்மாவின் மறைவிற்கு பிறகு அவரது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அம்மா கட்சியை காட்டி காத்தார். அப்படிப்பட்ட அதிமுக ஆட்சியை பற்றி பேச யோக்கியதை வேண்டும். கோவை மாநகர் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான திட்டத்தை செயல்படுத்தினோம். குடிமராமத்து திட்டம், நொய்யலில் தடுப்பணைகள், பில்லூர் 3வது குடிநீர் திட்டம், அத்திகடவு – அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அம்மாவின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் செயல்படுத்தினோம். நிலத்தடி நீர் உயர்த்தி விவசாயிகளுக்கு நன்மைகள் கிடைக்க செய்தோம்.
மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். உக்கடம் ஆத்துபாலம், திருச்சி மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலம் அதிமுக கொண்டுவந்தது. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்த நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் தற்போது அது மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால் கோவை மாநகரம் கொந்தளிக்கும்.
அன்னூரில் தொழிற்பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளிடம் இருந்து நிலங்களை எடுக்கக்கூடாது. கோவையில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. அதிமுக ஆட்சியில் சாலை பணிகள் திட்டம் ஏராளமாக கொண்டுவரப்பட்டன. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இப்போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.