March 7, 2016 tamilcnnlk.com
ஆண்டி, அரசனாகலாம், அரசன், ஆண்டியாகலாம் என்ற வாழ்க்கைத் தத்துவம் கார்வெட்டி நகர் சமஸ்தான வாரிசுகளுக்கு பொருந்தியுள்ளது. அரண்மனையில் பிறந்து இன்று வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார் 75 வயதாகும் கோவர்தன். மாதந்தோறும் கிடைக்கும் 350 ரூபாய் பென்சனை கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார் அவர். முதுமையின் காரணமாக அவரது உடல் தளர்ந்திருந்தாலும் மனஉறுதியோடு வாழும் அவரை நேரில் சந்தித்து பேசினோம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூர் தாலுகாவில் 600 ஆண்டுகள் பழமையானது கார்வெட்டிநகர் சமஸ்தானம். அதன் தலைநகரம் கார்வெட்டிநகர். புத்தூரில் தொடங்கி தமிழகத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி வரை அதன் எல்லை. இந்த சமஸ்தானத்தின் நேரடி வாரிசு நான். என்னுடைய தந்தை ராஜா குமாரசாமி ராஜா பகதூர். அவருடைய சகோதரர் வெங்கட் பெருமாள் ராஜாவுக்கு வாரிசு இல்லை.
அவரின் மரணத்துக்குப்பிறகு என்னுடைய தந்தை ராஜாவாக பதவியேற்றார். ராஜா குமாரராஜாவுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி சுந்தரகனகம்மாளுக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவி வெங்கட்ரமணாவுக்கு முனிரத்னம், வசந்தம்மாள், இந்திரசேனன் ஆகியோர் பிறந்தனர். இதில் இந்திரசேனன் இறந்து விட்டார்.
வெங்கட்ரமணா இறந்தவுடன் அவருடைய தங்கை பத்மவதியம்மாளை மூன்றாவதாக திருமணம் செய்தார். அவருக்கு நான், பாரிஜாதம், தவலேஸ்வரி ஆகியோர் பிறந்தோம். இதில் பாரிஜாதமும், தவலேஸ்வரியும் இறந்து விட்டனர். நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன்.
முனிரத்னம், வசந்தம்மாள் ஆகியோரையும் என்னுடைய தாயார் தான் வளர்த்தார். அவர்கள் தற்போது உயிரோடு இல்லை. நாங்கள் குடியிருந்த கார்வெட்டி நகர் சமஸ்தான அரண்மனையை பள்ளி கூடத்துக்காக என்னுடைய தந்தை தானமாக கொடுத்தார். அதன்பிறகு கார்வெட்டி நகரத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்தோம்.
சமஸ்தானத்துக்கு என்று ஏராளமான சொத்துக்கள், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. சொத்துக்கள் தமிழகத்திலும், ஆந்திராவிலும் இருந்தன. திருத்தணி கோயிலில் என்னுடைய தாத்தா போட்டோ இன்றும் உள்ளது. திருவேலங்காடு கோயிலில் என்னுடைய பெரியப்பாவின் சிலை உள்ளது. இரண்டு கோயில்களுக்கும் என்னுடைய தந்தை நிறைய சொத்துக்களை தானமாக கொடுத்துள்ளார். சமஸ்தானத்தின் அடுத்த வாரிசாக என்னை அறிவிக்க ஏற்பாடுகள் நடந்தன.
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் உறவினர்கள் (பங்காளிகள்) என்னை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையறிந்த என்னுடைய தாயார், சென்னை பட்டாபிராமில் உள்ள உறவினர் வீட்டில் ரகசியமாக தங்க ஏற்பாடு செய்தார். 1977ல் பட்டாபிராம் வந்த நான், அங்குள்ள ஒரு கம்பெனில் டிரைவராக வேலை செய்தேன். எனக்கு சுரேஷ், லதா, கீதா, சுனிதா ஆகியோர் அரண்மனையில் பிறந்தனர். இதில் கீதா இறந்து விட்டார்.
அரண்மனையை விட்டு நான் வெளியேறியதால் என்னுடைய தாயார் மறைவுக்குப்பிறகு அதை நிர்வகிக்கும் பொறுப்பு தங்கை தவலேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப்பிறகு அந்த பொறுப்பு அவருடைய பிள்ளைகள் லதா கிருபாகரன், தாரா, ஸ்ரீரிஷா ஆகியோர் கைக்கு சென்றது. பங்களா வீட்டில் அரண்மனையிலிருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பு மிக்க பொருட்கள் உள்ளன.
இப்போது அவைகள் லதா கிருபாகரனும், தாராவும், ஸ்ரீரிஷாவிடம் வசம் உள்ளன. அவர்களுக்குள் பொருட்களை பங்கீடுவதில் சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை எழுந்ததால் ஸ்ரீரிஷா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26.11.2015ல் புகார் கொடுத்துள்ளார். போலீஸார், லதா கிருபாகரன், தாராவிடம் கட்டப்பஞ்சாய்த்து செய்து அவர்களது வீடுகளிலிருந்து செம்மரத்தில் செய்யப்பட்ட விலைமதிப்புமிக்க பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த சொத்துக்களுக்கு எல்லாம் வாரிசான என்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். வறுமையில் வாடும் என்னால் அவர்களை எதிர்த்து போராட முடியவில்லை. ஒருக்கட்டத்தில் என்னை ராஜாவின் வாரிசு இல்லை என்று கூட சொன்னார்கள். வாரிசு என்பதை நிரூபிக்கவே என்னுடைய ஆயுள் காலம் முழுவதும் கடந்து விட்டது. இப்போது அதற்குரிய ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.
இப்போது சமஸ்தானத்தின் சொத்தை யார், யாரோ அனுபவித்து வருகிறார்கள். அதையெல்லாம் அரசு திரும்ப மீட்க வேண்டும். அதோடு லதா கிருபாகரன், தாரா, ஸ்ரீரிஷா ஆகியோரிடம் உள்ள விலைமதிப்புமிக்க பொருட்களையும் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை” என்று முடித்த கோவர்தன் அரண்மனையில் நடந்த சுவரஸ்மான சில சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“அப்போது எனக்கு 5 வயது. என்னுடைய தாயார் சொல்ல கேள்விபட்ட சம்பவம் இது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் ஆங்கிலேயே ராணுவம் கார்வெட்டி நகரத்தில் முகாமிட்டு இருந்தது. அதனால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டதால் ராணுவ உயரதிகாரிகளை வரவழைத்து அரண்மனை கோட்டைக்குள் முகாம் அமைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான வசதிகளை நான் செய்து தருகிறேன்.
மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் உறுதியளித்தப்படியே ராணுவம் இருந்த வரை அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தார் என்னுடைய தந்தை. அடுத்து, என்னுடைய தந்தை மகாத்மா காந்தியின் தீவிர பக்தர். காந்தி இறந்தபோது எங்களுடைய அரண்மனையின் உச்சியில் ஒலி பெருக்கியை பொருத்தி தன்னுடைய சமஸ்தான மக்களை அரண்மனையை சுற்றி அமர வைத்து இறுதி நிகழ்ச்சிகளை கேட்கும்படி ஏற்பாடுகள் செய்தார். பெரியவர்கள் யாரும் சாப்பிடக்கூடாது என்று உத்தரவும் போடப்பட்டது.
நான் அரண்மனை பள்ளிக்கூடத்தில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த சமயம். என்னுடைய தந்தை ராஜா என்பதால் என்னுடன் எப்போதும் நண்பர்கள் பட்டாளம் இருக்கும். ஒரு பிரச்னையில் சக மாணவன் ஒருவனை தாக்கி விட்டோம். ஆசிரியர் என்னை கண்டித்ததுடன் மட்டுமல்லாமல் மன்னிப்பு கேட்க சொன்னார். நான் மறுத்தது மட்டுமல்லாமல் அவரை எதிர்த்து கடுமையாக பேசி விட்டேன். மறுநாள் என் தந்தையிடம் ஆசிரியர் புகார் செய்தார்.
என்னையும், என் நண்பர்களையும் அழைத்து வரும்படி அரண்மனை வீரர்களுக்கு என் தந்தை உத்தரவிட்டார். பள்ளியில் இருந்த என்னையும், என் நண்பர்களையும் வீரர்கள் பிடித்து வந்து என் தந்தையின் முன்பு நிறுத்தினர். தவறு செய்ததற்காக மகன் என்று கூட பார்க்காமல் என்னையும், என் நண்பர்களையும் தலைகீழாக கட்டி சாட்டையால் அடிக்க உத்தரவிட்டார்.
அப்போது என்னைக் கட்டிய கயிறு அறுந்து கால் மூட்டு உடைந்தது. அது குணமாவதற்கு மூன்று மாதங்களானது. அன்று இரவு என் அருகே வந்து தடவி கொடுத்து ஆறுதலாக பேசினார் என் தந்தை. ராஜாவின் மகன் தவறு செய்யக்கூடாது என்றும் அறிவுரை கூறினார். என்னுடன் அடிவாங்கிய நண்பர்களில் சிலர் இன்னும் கார்வேட்டி நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
சுதந்திரத்துக்குப்பிறகு முதல் புத்தூர் எம்.எல்.ஏ என்னுடைய தந்தை. அப்போது சென்னை ராஜதானியாக இருந்தது. சுதந்திரத்துக்குப்பிறகு தன்னை ராஜா என்று அழைப்பதை அவர் விரும்பவில்லை. சென்னைக்கு செல்லும் போது சில சமயம் தன்னுடைய செவர்லட் காரில் என்னையும் என்னுடைய சகோதரர்களையும் அழைத்து செல்வார். பெரிய ஓட்டலில் சாப்பிடுவோம். அந்த காரின் நிறம் கூட வெள்ளை.
என் தந்தை மட்டுமே அந்த நகரத்தில் கார் வைத்திருந்தார். என்னுடைய தந்தையின் கார் வரும் விவரத்தை புத்தூர் ரயில் நிலையத்துக்கு தகவல் சொல்லி விடுவார்கள். புத்தூர் ரயில்வே கேட்டை கார் கடக்கும் வரை ரயில் புத்தூர் ரயில் நிலையத்தில் நிற்கும். ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் வழி அனுப்பி வைத்த சம்பவம் கூட உண்டு. என்னுடைய தந்தை அப்போதே நூறுரூபாய் அன்பளிப்பாக கொடுப்பார்.
1951ல் கடும் நோயால் பாதிக்கபட்டேன்.
அப்போது பெரிய மருத்துவமனை என்றால் வேலூர் மருத்துவமனை தான். மூன்று நாட்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அப்போதே 3500 ரூபாய் செலவானது. என்னுடைய தந்தை 1952ல் காலமாகி விட்டார். எனக்கு இருக்கும் ஒரே கவலை கார்வெட்டி சமஸ்தானத்தின் வரலாறு என்னோடு முடிந்து விடக்கூடாது. எங்களுடைய பூர்விக அரண்மனை பாழடைந்து உள்ளது. கார்வெட்டி நகர அரண்மனை ஆந்திராவில் உள்ளதால் அந்த அரசு அதை சீரமைத்து அருங்காட்சியமாக மாற்ற வேண்டும்.
அதுபோன்று தமிழக அரசும் என்னுடைய தந்தை, முன்னோர்களால் திருத்தணி, திருவேலங்காடு, சோளிங்கர் மற்றும் எஸ்.வி.ஜி புரம் கோயில்களுக்கு தானமாக கொடுத்த சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு நிலமில்லாத ஏழைகளுக்கு கொடுத்தால் எனக்கு சந்தோஷம். இன்னும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதன்விவரம் அரண்மனை குறிப்புகள் மற்றும் டைரிகள், ஆவணங்களில் உள்ளன. அதை என்னுடைய சகோதரியின் மகள்கள் பதுக்கி வைத்துள்ளனர். அதை மீட்டெடுத்தால் இன்னும் பல உண்மைகள் வெளியில் வரும்” என்றார்.
சுனிதா, லதா ஆகியோர் கூறுகையில், “புத்தூர் தொகுதியில் முதல் எம்.எல்.ஏ ராஜா குமாரசாமி பகதூர். அவரது காலக்கட்டத்துக்குப்பிறகு எங்களைப்பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ராஜாவின் நேரடி வாரிசில் என்னுடைய அப்பா கோவர்தன் மட்டுமே உயிரோடு இருக்கிறார். அவர் குறித்த தகவல்களை மறைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இது சமஸ்தானத்தின் மரியாதையையும், சொத்துக்களையும் அனுபவித்து வருபவர்கள் செய்யும் தில்லுமுல்லு.
அதற்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருக்கிறார்கள். கார்வெட்டி சமஸ்தானத்தின் வாரிசு என்று என்னுடைய அப்பாவை நிரூபிக்க பல ஆண்டுகளாக போராடி இப்போது வெற்றி பெற்று இருக்கிறோம். சமஸ்தானத்தின் சொத்து என்று எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. என்னுடைய அத்தை தவலேஸ்வரியின் மூன்று மகள்களின் கட்டுப்பாட்டில் அரண்மனை பொருட்கள் உள்ளன.
இப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைக்குப்பிறகு சில உயில்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. நம்நாட்டின் புராதான பொருட்களை மீட்பதோடு வறுமையில் வாடும் சமஸ்தானத்தின் வாரிசுகளாக எங்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். என்னுடைய அண்ணன் சுரேஷ், அப்பாவை கவனிப்பதில்லை. அவர் வேலைப்பார்த்த கம்பெனியிலிருந்து மாதம் 350 ரூபாய் பென்சன் வருகிறது. அதை வைத்து அவரால் எப்படி வாழ முடியும். இதனால் அவரை நாங்கள் கவனித்து வருகிறோம்” என்றனர்.
வழக்கறிஞர் ராஜாமணி, “கார்வெட்டி நகர் சமஸ்தானத்தின் சொத்துக்கள், பொருட்களை சிலர் அபகரித்து அனுபவித்து வருகின்றனர். தவலேஸ்வரியின் மகள்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். அதற்கு உருப்படியான பதில் அளிக்காமல் உள்ளனர். பொதுவாக இதுபோன்ற பொருட்களை அரசின் அனுமதியோடு சம்பந்தப்பட்ட வாரிசுகள் அனுபவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. வாரிசுகளுக்குள் பிரச்னை ஏற்படும் போது அந்த பொருட்களை அவர்களிடமிருந்து மீட்டு அரசே பாதுகாக்க வேண்டும்.
ஆனால், இங்கு விலைமதிப்பு மிக்க பொருட்களான யானை தந்தங்கள், சாய்பாமா மந்திரம், பர்மா உட்ஸால் செய்யப்பட்ட பீரோக்கள், ஈட்டிகள், கத்திகள், வெள்ளித் தட்டுக்கள், டாலருடன் கூடிய முத்துமாலைகள் உள்ளிட்டவைகளை விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரிசுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையை கட்டப்பஞ்சாயத்து செய்ய முன்னாள் நடிகையும், எம்.எல்.ஏ.வுமான அவரிடம் சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
இதற்குள் இந்த பிரச்னையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல கோவர்தன் நடவடிக்கை எடுத்ததால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ பின்வாங்கி விட்டார். ஆந்திர, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றார்.
இதுகுறித்து ஸ்ரீரிஷாவிடம் பேசினோம். “கார்வெட்டிநகர் சமஸ்தானத்தின் வாரிசுகளில் நானும் ஒருவர். என்னுடைய அக்காள் லதா, தாரா ஆகியோர் என்னுடைய தாத்தா எழுதிய உயிரை இதுவரை மறைத்து வருகின்றனர். உயிலில் இரண்டாவது, மூன்றாவது மனைவியின் குழந்தைகள் தன்னுடைய வாரிசு என்று எழுதி இருக்கிறார். இதில் இப்போது உயிரோடு இருப்பது கோவர்தன் மட்டுமே. அவர் மூலமாக மட்டுமே சொத்துக்களை மீட்டெடுக்க முடியும். எங்கள் பரம்பரையில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
அதில் சில குடும்பங்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்கள். எங்கள் பரம்பரைக்கு சம்பந்தமில்லாதவர்கள் அனுபவித்து வரும் சொத்துக்களை மீட்டெடுக்கப்பட வேண்டும். அரண்மனையில் இருந்த செம்மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் 15 ஆண்டுகளாக கார்வெட்டி நகர் பங்களா வீட்டில் ஒரு அறையில் கிடக்கின்றன. அவைகள் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். இப்போது போலீஸ் நிலையம் மூலம் நான்கு செம்மரத்தில் செய்யப்பட்ட டேபிள்களை மீட்டுள்ளேன். உயிலில் உள்ள முழுவிவரம் தெரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.