July 8, 2017 தண்டோரா குழு
ராமேசுவரத்தில் ரூ.15 கோடியில் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி 27-ந்தேதி திறந்து வைக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பில் அப்துல்கலாம் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், முதல் கட்டமாக பேக்கரும்பில் அப்துல்கலாம் மணிமண்டபம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார் மேலும், முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி ரூ.50 கோடி மதிப்பில் முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை போடப்பட்டுள்ள புதிய சாலையையும் திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி 27-ந் தேதி ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.