May 31, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகராக அறியப்பட்ட முகமது பஷீர் சாம்பின்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் பெரும் ஆரவாரத்துடன் இருப்பார்கள். அதிலும் ஓவ்வொரு வீரர்களும் ஒரு தனி தீவிர ரசிகர் இருப்பார். சச்சினுக்கு சுதீர் இருப்பதை போல் தோனிக்கும் ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து கையில் பாகிஸ்தான் கொடியுடன் ஒருவர் ஆஜராகி விடுவார். அவரது பெயர் முகமது பஷீர். கராச்சியில் பிறந்த அவர் தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எங்கு நடந்தாலும், இந்திய அணியின் சூப்பர் ஃபேனாகக் கருதப்படும் சுதிர் கவுதமுடன், அவர் தவறாமல் ஆஜராகிவிடுவார்.
பஷீர் பாகிஸ்தான் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும், தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனியைத்தான் சுட்டிக்காட்டுவார். ஆனால்,சமீபகாலமாக பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால்,சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை ஆதரிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பஷீர் கூறுகையில்,
கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடங்கி இவ்விரு அணிகள் மோதிய எந்த போட்டியையும் மிஸ் செய்ததே இல்லை. ஆனால் ஜூன் 4ம் தேதி இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகரில் நடக்கும் இந்த போட்டி ரமலான் மாதத்தில் நடப்பதால், குடும்பத்துடன் புனித மெக்கா நகருக்குச் செல்ல இருப்பதால் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியாத சூழலில் இருப்பதாக கூறினார்.
மேலும், அணிகளின் பலம் குறித்து பேசிய பஷீர்,
இப்போது நடக்க இருப்பது சாதாரணமான இந்தியா – பாகிஸ்தான் போட்டி போல் இல்லை.பாகிஸ்தானை விட எல்லாவிதத்திலும் இந்திய அணி பலம் பொருந்தியதாக இருக்கிறது என்று கூறினார்.