May 23, 2017 தண்டோரா குழு
ஆளுநர் மாளிகையில் உள்ள பேனாவை திருடிய சிறுவன், மனிப்புக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளான். இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தின் ஆளுநர் மாளிகையிலுள்ள அலுவகத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் 4 வயது சிறுவன், சாமுவேலும் வந்தான். அவன் ஆளுநர் அலுவலக மேஜையிலிருந்த பேனாவையும், நிலக்கடலை வகையை சேர்ந்த ஹேசல்னட் என்னும் கடலையையும் எடுத்துகொண்டான்.
வீடு திரும்பிய அவன், தான் செய்த தவறை எண்ணி வருத்தமடைந்தான். உடனே ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினான்.
அதில் அவன் எழுதியதாவது:
“கடந்த மாதம் 19-ம் தேதி, உங்கள் அலுவலகத்தை சுற்றிப்பார்க்க, நான் என் வகுப்பு மாணவர்களுடன் வந்திருந்தேன். அப்போது, உங்கள் மேஜையிலிருந்த பேனாவையும் சிறிது ஹேசல்னட்டையும் எடுத்துக்கொண்டேன்.
எனக்கு சொந்தமில்லாத பொருளை எடுத்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்களும் உங்கள் ஒரேகான் மக்களும் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் ” என்று தெரிவித்திருந்தான்.
அதோடு, ஒரு பேனாவையும் ஹெசல்னட் பதிலாக 1 டாலர் பணத்தையும் அந்த கடிதத்துடன் வைத்து ஆளுநருக்கு அவன் அனுப்பியுள்ளான்.
சாமுவேல் அனுப்பிய கடிதத்தை பார்த்த ஆளுநர் ஆச்சரியம் அடைந்தார். அவனுக்கு பதில் கடிதம் எழுதினார். சாமுவேல் செய்த தவறை தான் மன்னித்து விட்டதாகவும், மீண்டும் அங்கு வர அவனை ஊக்குவித்தார். அவன் அனுப்பிய பேனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.