May 16, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் உள்ள ஒரு இல்லத்தில் 72 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூஜெர்சி மாநிலத்தில் வசித்த மூதாட்டி வெர்ஜீனியா. அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஆனால் அவர் வாழ்ந்த வீட்டிலிருந்து ஒரு காதல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெர்ஜீனியா வசித்த வீட்டை ஆலன் குக் என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார். பழுதடைந்த அந்த வீட்டை அவரும் அவருடைய மகள் மெலிசா பாஹி என்பவரும் சேர்ந்து புதுபிக்க தொடங்கினர். அவ்வாறு செய்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் அடிக்கூரையின் இடுக்கிலிருந்து தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதம் இருந்ததை கவனித்துள்ளனர்.
1945ம் ஆண்டு மே மாதம் ரால்ப் என்பவருக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதம் அது. தன் கணவரை நினைத்து எழுதிய ஒரு அழகான காதல் கடிதம். அச்சமயத்தில், ரால்ப் கடற்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
“நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் என் வாழ்கையில் ஒரு சூரியனை போன்றவர். சூரியனை சுற்றி அனைத்தும் செல்வது போல, என் இருதயம் உங்களை சுற்றியே உள்ளது” என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தது.
இதை படித்த மெலிசாவின் உள்ளம் நெகிழ்ச்சியடைந்தத்து. அந்த கடிதத்தை சரியான நபரிடம் கொடுப்பது தான் சரியானது என்று எண்ணினார். சமூக வலைத்தளத்தில் ரால்ப் குறித்து தேடினார். தற்போது 96 வயதான ரால்ப், கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா பார்பரா நகரின் தன் மகனுடன் வசித்து வருகிறார் என்று கண்டுபிடித்தார். அந்த கடிதத்தை அவர்களுக்கு உடனே அனுப்பி வைத்தார்.
தங்கள் அன்னையிடமிருந்து இப்படிப்பட்ட கடிதம் கிடைத்ததை கண்ட ரால்ப் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். உடனே வீடியோ அழைப்பு மூலம் மெலிசாவை தொடர்புக்கொண்டு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
“வெர்ஜீனியா எனக்கு எழுதிய கடிதத்தை பெற்றதும் ஆச்சரியம் அடைந்தேன். அதை படித்ததும் அதிக உணர்ச்சி அடைந்தேன்” என்று ரால்ப் தெரிவித்தார்.