January 26, 2017 தண்டோரா குழு
வெளிநாட்டு ராணுவப் படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் வரை அமைதி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்று தலிபான் அமைப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தீவிரவாத அமைப்பான தலிபானின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜஹிட் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், வெளிநாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தான் போன்ற ஏழை நாடுகள் வெளிநாட்டு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவது மிகவும் அவசியம்” என்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் “இஸ்லாமிய எமிரேட்” சார்பாக எழுதப்பட்ட அக்கடிதம் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை (ஜனவரி 26) அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதம் ஆங்கிலத்திலும் ஆப்கன் நாட்டில் பேசப்படும் தாரி, பஷ்டூ ஆகிய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
நான்கு பக்கங்கள் கொண்ட அக்கடிதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டின் சரித்திரம், அந்நாட்டின் மீது படையெடுத்த படைகளால் ஏற்பட்ட தோல்விகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஊழலும் பற்றிய தகவலும் இடம்பெற்றுள்ளன.