May 6, 2017 தண்டோரா குழு
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மோசடி புகாரின் பேரில் மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தன்னிடம் ரூ.30 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மன்னார்குடி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதன் பின்னும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2- ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனிடையே உத்தரவுக்கு பிறகும் வழக்குப் பதிவு செய்யப்படாததை கண்டித்த உச்ச நீதிமன்றம் ‘தமிழக உணவுத் துறை அமைச்ச காமராஜ் மீதான, 30 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அமைச்சர் என்றால், சட்ட விதிகளுக்கு மேலானவரா’ என, கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.