December 17, 2024 தண்டோரா குழு
கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகெங்கிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆங்காங்கே, பண்டிகைக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் பவனி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில்,கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பைக்கர்ஸ் கிளப் சார்பாக கிறிஸ்துமஸ் பைக் பேரணி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.
ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரியின் செயலர் முனைவர் அஜீத் குமார் லால் மோகன் அறுவுறுத்தலின் படி நடைபெற்ற, இந்த பைக் பேரணியை கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜு துவக்கி வைத்தார்.
இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பைக்குகளில் வலம் வந்தனர்.அமைதி மற்றும் மகிழ்ச்சி என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் பைக் பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி வலம் வந்தனர்.
பைக்கில் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள் வழியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சென்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவையில் பைக் ஓட்டி சென்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.