December 27, 2016 தண்டோரா குழு
மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்குச் சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.உத்தரா கண்ட் மாநிலம் டேராடூன் அருகே சர்தாம் தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் அரசு மத்திய பொறுப்பில் இருந்தபோது உத்தரா கண்ட் மாநிலத்தில் யாத்திரை வரும் பக்தர்களுக்காக எந்த வசதியையும் ஏற்படுத்தவில்லை. சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதே தற்போது உள்ள மத்திய அரசு இலக்காக வைத்துள்ளது. அடுத்த முறை யாத்திரை வரும் பக்தர்கள் அரசின் பணியை எண்ணிப் பார்ப்பீர்கள். மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களைச் சென்றடைய வேண்டும்.
செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்ட சர்தாம் நெடுஞ்சாலைத் திட்டம், உத்தரா கண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
உத்தரா கண்ட் மக்கள் வளர்ச்சிக்காக இனியும் காத்திருக்க வேண்டியதில்லை. மாநிலம் வளர்ச்சியின் புது உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும். நான் தவறான வாக்குறுதிகள் எதையும் அளிக்கவில்லை. நான் சொன்னது எதையும் மறக்கவில்லை. 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. முந்தைய அரசு செய்யாததை, விரைவில் எப்படிச் செய்தீர்கள் என என்னை மக்கள் கேட்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.