September 23, 2023 தண்டோரா குழு
கோவை கணியூரில் அமைந்துள்ளது பார்க் கல்வி குழுமங்கள். இதன் பொன்விழா மற்றும் சிறந்த ஆசிரியர் விருது மற்றும் துரோணா விருது விழா கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும்
நடிகருமான கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மறைந்த பார் கல்வி குழுமங்களின் நிறுவனர் பிரேமா ரவியின் அருளாசியுடன் நடைபெற்ற இந்த விழாவில் பார்க் கல்வி குழுமங்களில் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பி.வி ரவி, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி மற்றும் செயலாளர் டி ஆர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பார்க் பொன்விழா ஆண்டு 2023 துரோணா விருது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் “தி மூன் மேன் ஆஃப் இந்தியா” என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் “கையொப்பம்” நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஃ எழுத்தாளர் புவியரசு ஆகியோருக்கு துரோணா விருது வழங்கப்பட்டது. மேலும் பார்க் கல்வி குழுமங்களின் முன்னாள் மாணவர்களான சந்திராயன் மூன்று திட்ட அலுவலர்களான ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் முன்னாள் மாணவர்கள் பிக் பாஸ் சீசன் 6 புகழ் நடிகை ஷிவின் கணேசன், திரைப்பட தயாரிப்பாளர் கே விஜய் பாண்டி, ஆப்ஷன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான சுஜித், யோகா போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற யோகா டிரெயினர் வைஷ்ணவி உட்பட்டவர்களுக்கு சிறப்பு முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கி கெரவிக்கப்பட்டது.
மேலும் கோவை மாநகரில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
விழாவில் கமலஹாசன் பேசியதாவது :-
தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பெற்றவர்கள் நிலவை ஆள்கிறார்கள். அதில் சிலர் இந்த கல்லூரியில் படித்தவர்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி தான் ஒரு சமூகத்தின் கலங்கரை விளக்கம்.தமிழ் சமூகம் எழுச்சி பெறுவதில் ஆசிரியர்கள் பங்கு மிக அதிகம். பள்ளி நாட்களிலேயே எங்களுக்கு ஓரளவு அரசியல் புரிதல் இருந்தது.அந்த புரிதலை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள் தான்.
ஆனால் இப்போது அரசியலில் இறங்கினால்,பேசினால் ஆபத்து என்று சொல்லி ஆசிரியர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.இதனால் தன்னை நேரடியாக பாதிக்கின்ற கல்விக் கொள்கை இட ஒதுக்கீடு நுழைவுத் தேர்வு வேலைவாய்ப்பு குறித்து எதுவும் அறியாதவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள்.அதற்காக நான் உங்களை படிப்பை எல்லாம் விட்டுவிட்டு உடனடியாக அரசியலுக்கு வாருங்கள் என்று சொல்லவில்லை.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது நமது நாட்டை யார் ஆள வேண்டும் என்று முக்கியமான முடிவை எடுக்கும் தேர்தல் அது 18 வயதை பூர்த்தி செய்த நீங்கள் முதன் முதலில் வாக்களிக்க போகிறீர்கள் உங்கள் வாக்கை பெற போகிறவர்கள் யார், நீங்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள், அவர்களின் தகுதி என்ன உங்களை ஆளும் தகுதி அவர்களுக்கு உள்ளதா என்பதை எல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரால் உங்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியுமா தொழில் வளர்ச்சிக்கு துணை நிற்பாரா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். எனவே மாணவர்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை நீங்கள் எல்லோரும் சரியாக வாக்களிக்க தொடங்கி விட்டால் புதிய இந்தியா கண்டிப்பாக பிறக்கும். அரசியல் உங்களை தாக்கும் முன்பு உங்கள் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.