February 22, 2017
தண்டோரா குழு
தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க புதிய குழு அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதையடுத்து, 5 பேர் கொண்ட தனிக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அந்தக் குழுவில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், நிதித் துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவர். மேலும், அந்தக் குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை ஜூன் 30ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.