May 31, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 13ம் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் பொருட்காட்சி அமைந்துள்ளது.
இப்பொருட்காட்சியில் 27 அரசுத்துறை அரங்களும், 6 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15ம், சிறியவர்களுக்கு ரூ.10ம், பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த பொருட்காட்சியை நேற்று முன் தினம் வரை அதாவது 16 நாட்களில் அரசு பொருட்காட்சியினை பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பொருட்காட்சியினை காண வருகின்றனர்.