December 10, 2016 தண்டோரா குழு
வருமான வரித் துறையினரின் சோதனையைத் தொடர்ந்து சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி. தொழில் அதிபர் மற்றும் தமிழக அரசு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாராகவும் உள்ளார். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக இவருக்கு எதிராக எழுந்த புகாரைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, உறவினர் சீனிவாச ரெட்டி நண்பர் பிரேம் ஆகியோருக்குச் சொந்தமான அண்ணா நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் உள்ள 2 இடங்கள், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வீடு உட்பட மொத்தம் 8 இடங்களில் வியாழக்கிழமை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 160 பேர் 8 குழுக்களாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளாக வருமான வரித் துறையினர் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாசுலு மற்றும் பிரேம் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 24 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய ரூ. 2000 நோட்டுகள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சேகர் ரெட்டியை நீக்கியுள்ளார்.