September 9, 2024 தண்டோரா குழு
கோவை- இந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான அம்ருதா விஸ்வ வித்யாபீடம்,அதன் பட்டதாரிகளின் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கோயம்புத்தூர் வளாகத்தில் அதன் 21வது பட்டமளிப்பு விழாவைக் வெகு விமரிசையாகக் கொண்டாடியது.
இவ்விழாவில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், பேராசிரியர் அபய் கரண்டிகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவர் தனது சிறப்புரையில்,
எதிர்காலத்தை வடிவமைப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். இளைஞர்கள் இந்தத் துறைகளில் முன்னேறுவதற்கு தங்களது முழு திறனை பயன்படுத்த வேண்டும் என்ற அவர், “உலக அரங்கில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது, இந்த வாய்ப்பை நமது இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.பேராசிரியர் அபய், சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்துடன்,தனிப்பட்ட முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் அம்ருத விஸ்வ வித்யாபீடத்தின் வேந்தர் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி காணொளி மூலம் மனதிற்கு ஊக்கமளிக்கும் செய்தியை வழங்கினார்.அதில் கற்றதை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்திக் கூறியது மட்டுமல்லாது பட்டதாரிகளை உலக முன்னேற்றத்திற்கு பங்களிக்க தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு அப்பால் சிந்திக்குமாறு கூறினார். “உலகம் உங்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்புகளை இழக்காதீர்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பெங்களூரு டி வி எஸ் (TVS) மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் எஸ். தேவராஜன் கலந்து கொண்டார். வாழ்நாள் முழுவதும் கற்பதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். பட்டதாரிகள் கற்றதை நன்கு கிரகித்துக்கொள்பவர்களாகவும், புதிய யோசனைகளுக்குத் திறந்திருக்கவும் ஊக்குவித்தார். “வாழ்க்கை என்பது தொடர்ச்சியான கற்றலைப் பற்றியது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் கவனிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது புதிய யோசனைகளை வடிவமைக்க உதவுகிறது, ”என்று அவர் கூறினார்.
இந்நிகழ்விற்கு மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொருளாளரும், அறங்காவலருமான சுவாமி இராமகிருஷ்ணானந்தபுரி அவர்கள் தலைமைத் தாங்கி வாழ்த்துரை வழங்கினார். பட்டதாரிகளின் வெற்றிப் பாதையில் அவர்களது குடும்பம், சமூகம் மற்றும் இயற்கையின் பங்கினை வலியுறுத்திய அவர், அவர்களுக்கான கடனை ஒருபோதும் மறக்கலாகாது என்றார்.
இந்நிகழ்வில், அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் முக்கிய பிரமுகர்களான, பொறியியல் பள்ளியின் டீன் டாக்டர் சசாங்கன் ராமநாதன், செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் டீன் டாக்டர் கே.பி. சோமன், பேராசிரியர். கார்ப்பரேட் & தொழில்துறை உறவுகளின் இயக்குநர் சி. பரமேஸ்வரன், ரெஜிஸ்ட்ரர் டாக்டர் கே.சங்கரன், வணிகவியல் பள்ளியின் டீன் டாக்டர். நவ சுப்ரமணியம் மற்றும் வளாக இயக்குனர் திரு சதீஷ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொறியியல், மேலாண்மை, கலை & அறிவியல், மற்றும் வேளாண்மை போன்ற துறைகளைச் சார்ந்த சிறப்பு விருந்தினர்களிடமிருந்து, சுமார் 2,040 மாணவர்கள், பட்டங்களைப் பெற்றனர்.
அவர்களுள் 729 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 30 பிஎச்டி பட்டங்கள் வழங்கப்பட்டன. பி.டெக் திட்டத்தில் சுமார் 1,202 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 132 மாணவர்கள் எம்.டெக் பட்டங்களையும், 186 மாணவர்கள் எம்பிஏ பட்டங்களையும், 369 மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் பட்டங்களையும், 118 மாணவர்கள் பி.எஸ்சி பட்டங்களையும் பெற்றனர். வளாக அளவில் முதலிடம் வகித்தவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு, கோயம்புத்தூர் வளாகத்தில் பட்டம் பெற்றவர்களில், சுமார் 94% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.