March 23, 2023 தண்டோரா குழு
கோவை காந்திபுரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீஸாரை தாக்கிய திருநங்கைகள். இதனால் கோவையில் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திபுரம், டாடாபாத், பரூக் பாண்டு ரோடு,100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, சிங்காநல்லூர், நேரு ஸ்டேடியம், மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி, தடாகம் சாலை, திருச்சி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் இப்பகுதி சாலைகளில் உள்ள சிக்னல்களில் திருநங்கைகள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளிடம் பணம் வசூல் செய்வார்கள். விரும்பம் உள்ளவர்கள் பணம் தருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் தரமறுத்து அவர்களை கடந்து சென்றுவிடுவார்கள். இதில் பெரும்பாலான திருநங்கைகள் பணம் தராதவர்களிடம் எந்த விதமான பிரச்சனையும் செய்வதில்லை. ஒரு சிலர் மட்டும் அவர்களை திட்டி, சாபம் கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.
கோவை மாநகரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் நேற்று இரவு காட்டூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து வாகனம் காந்திபுரம் டாடாபாத் அருகே சென்றுக்கொண்டிருந்த போது திருநங்கைகள் பணம் வசூலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அப்போது ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. அதாவது சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காலீஸ்வரி திருநங்கைகள் இடம் இரவு நேரத்தில் பணம் வசூலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த திருநங்கை நித்யா மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 10 பேர் ரோந்து வாகனத்தை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கார் கதவை திறந்து சப் இன்ஸ்பெக்டரை தாக்கவும் முயற்சி செய்தனர். இதனை அடுத்து சக போலீஸார் அவர்களை தடுக்க முயன்ற போது கார் இடது பக்கம் கண்ணாடியை திருநங்கைகள் தாக்கிவிட்டு சென்றனர். இதில் சப் இன்ஸ்பெக்டருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து காட்டூர் போலீஸார் திருநங்கை நித்யா மற்றும் அவரது கூட்டாளிகள் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நித்யா என்ற திருநங்கை மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸார் வழக்கில் சம்பந்தப்பட்ட திருநங்கைகளை கைது செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போலீஸாரையே திருநங்கைகள் தாக்கிய விவகாரம் கோவை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.