September 9, 2017 தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கனமழை காரணமாக குளம் குட்டைகளில் நீர் நிரம்பியது கரை உடையும் அபாயத்தில் உள்ள குளத்து நீரை வெளியேற்ற கோரி ஒரு புறம் பொதுமக்கள் சாலை மறியலில், ஒரு புறமும் நீரை வெளியேற்ற கூடாது என கூறி விவசாயிகள் மடையை அடைத்து ஒரு புறமும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்புஏற்பட்டது.
திருப்பூரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள குளம் குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வரண்டு கிடந்த குளங்கள் அனைத்தும் நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் அவினாசி தாமரை குளத்தில் நீர் வரத்து அதிகரித்து கரை உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே குளக்கரை ஓரம் குடியிருந்து வரும் சீனிவாசாபுரம் பொதுமக்கள் தங்களது பகுதிக்குள் குளம் உடைந்தால் பாதிக்கப்படும் என கூறி உடனடியாக குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற கோரி அவினாசி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே மங்கலம் சாலையில் உள்ள மதகு வழியாக தண்ணீரை திறந்து விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் மதகுகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.