September 22, 2017 தண்டோரா குழு
திருப்பூரை அடுத்த அவினாசியில் அரசு ஜீப் பின்புறம் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திருச்செங்கோட்டை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் உட்பட 7 பேர் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பாதரை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. திருச்செங்கோடு கூட்டுறவு சங்க தலைவரும், அதிமுகவின் ஒன்றிய கழக செயலாளருமான கந்தசாமி மற்றும் சங்கத்தின் துணை தலைவர் ஜேம்ஸ்ராம், பாலசுப்பிரமணியம் உட்பட 7 பேர் புது தில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள விமானத்தில் செல்ல திருச்செங்கோட்டில் இருந்து கோவை விமானநிலையம் நோக்கி அரசாங்க ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஜீப் அவினாசியை அடுத்த தெக்கலூர் பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் வேகமாக கோவை நோக்கி வந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஜீப்பின் பின்பகுதியில் மோதியது.இதில் நிலை தடுமாறுய ஜீப் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி அங்கிருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த கந்தசாமி, ஜேம்ஸ்ராம்,கதிர்வேல் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஓட்டுனர் பாலசுப்பிரமணியம் உட்பட இரண்டு பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கி பலியான உடல்களை இடிபாடுகளுக்கிடையே இருந்து மீட்டு அவினாசி போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுனரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.