February 10, 2017
தண்டோரா குழு
“அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் சுதந்திரமாக உள்ளனர். அவர்களை யாரும் கடத்திச் செல்லவில்லை. அவர்கள் சிறை வைக்கப்படவுமில்லை, யாரும் அச்சுறுத்தவும் இல்லை” என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது;
அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களை யாரும் கடத்தி செல்லவில்லை. அவர்கள் சிறை வைக்கப்படவும் இல்லை. யாரும் அவர்களை அச்சுறுத்தவும் இல்லை. அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். தொண்டர்கள் ,உறுப்பினர்கள் என யாரும் துரோகத்திற்குத் துணைபோக மாட்டார்கள்.
அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் சுதந்திரமாக உள்ளனர். அவர்களைக் காணவில்லை என குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. சட்டப் பேரவை உறுப்பினர்களைச் சிறை வைப்பதற்கு அவர்கள் குற்றவாளிகளா என்ன…. அவர்கள் மக்களின் பிரதிநிதிகள்.
தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கியதாக ஓ. பன்னீர்செல்வம் கூறுவது முற்றிலும் பொய். அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் செயல்படுவதற்குப் பின்னணியில் தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன் விலகியது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
ஓ. பன்னீர்செல்வம் தாக்கப்பட்டு ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் பெற்றதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது”
இவ்வாறு வளர்மதி கூறினார்.