February 18, 2017 தண்டோரா குழு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா ஆதரவு அணியைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் அந்த அணியிலிருந்து வெளியேறினார்.
சொந்த ஊரான கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் திரும்பியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பாததால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய அவர், “அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை. ஆகவே, சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணிக்கிறேன். சொந்த ஊர் திரும்பிவிட்டேன்.
அ.தி.மு.க.வின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் ராஜிநாமா செய்துவிட்டேன். பணம், பதவி எனக்கு முக்கியமல்ல. கொள்கைதான் முக்கியம். மக்கள் மற்றும் தொண்டர்கள் கருத்தை அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளேன். அ.தி.மு.க.விற்குள் ஒரு குடும்பத்தைத் திணிப்பதை எதிர்க்கிறேன்” என்றார் பி.ஆர்.ஜி. அருண்குமார்.