February 22, 2017 ஜாகர்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் விளையாட்டு மைதானத்தை உபயோகிக்க முடியாமல் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தவிக்கிறார்கள். விளையாட்டு மைதானத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஹவுசிங் யூனிட் பகுதி. கோவை மாநகராட்சி 64-வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி கட்டடத்தில் அமைந்துள்ளன.
ஹவுசிங் யூனிட் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு முன்புறம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. சுமார் 2௦௦-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திடல் உள்ளது.
இந்த மைதானத்தை குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். குழந்தைகள் இந்தத் திடலில் விளையாடி மகிழ்கிறார்கள். இளைஞர்கள் காலை, மாலை நேரங்களில் கூடைப் பந்து, கால்பந்து, இறகுப் பந்து, கைப்பந்து விளையாடுகிறார்கள். உடற்பயிற்சி செய்கிறார்கள். சிறியவர்களும் பெரியவர்களும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த விளையாட்டு மைதானத்தில் சிலர் கட்டடக் கழிவுகளைக் கொட்டி பாழாக்கி வருகிறார்கள். இதனால், இந்த மைதானம் வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிவிட்டது, சீரழிந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி, இரவு நேரங்களில் தனியார் சொகுசுப் பேருந்துகள் அந்த மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் நடைப்பயிற்சி செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது எனவும் அப்பகுதியில் உள்ள வயதானவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அஜித்குமார் கூறுகையில்,
“விளையாட்டு மைதானம் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றோம். இங்கு கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாசு காரணமாக சுவாசக் கோளாறும் நேரும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் குழந்தைகளும் பெண்களும் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று வருவதற்குக் கூட சிரமப்படுகிறார்கள். இது குறித்து நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தினசரி ஓடியாடி விளையாடி வந்தால் அலுவலகம், கல்லூரி மற்றும் பள்ளிக்குச் சென்று வருவோருக்கு மன அழுத்தம் குறையும் என மருத்துவ ரீதியாகச் சொல்லப்படுகிறது. தற்போது சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் விளையாட்டு மைதானம் கட்டடக் கழிவுகளினாலும், தனியார் பேருந்துகளின் ஆக்கிரமிப்பாலும் அப்பகுதி மாணவர்கள், வயதானவர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் மன உளைச்சல்தான் அடைகிறார்கள்.
இது குறித்து பிரஜித் கூறுகையில்,
“சிறிய வயது முதல் இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடி வருகிறேன். இந்த விளையாட்டு மைதானத்தில் உருவான பி- 12 என்னும் மட்டைப் பந்து கிளப் அணி சர்வதேச அளவில் மட்டைப் பந்து விளையாட்டில் கிளப் அணிப் போட்டிகளுக்குச் சென்று விளையாடி பதக்கம் வென்றுள்ளது. ஆனால், சுமுகமாக விளையாடி பயிற்சி பெற்றோம். தற்போது ஆக்கிரமிப்பினால் விளையாடவே முடியவில்லை. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்கள் இந்த மைதனத்தில் உருவாக முடியாது” என்றார்.
இது குறித்து சிங்காநல்லூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ந. கார்த்திக்கிடம் கேட்டதற்கு,
அவர், “இது குறித்து 3 மாதங்களுக்கு முன்பே கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். கட்டடக் கழிவுகளை அகற்றக் கோரியும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நடைப் பயிற்சி மேற்கொள்ள நடைபாதைத் தளம் அமைக்கக் கோரியும் மனு அளித்துள்ளேன். வரும் நிதியாண்டில் இதற்கான நிதி ஒதுக்கி தரப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார். விளையாட்டு மைதானம் விரைவில் தூய்மைப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பதிலளித்தார்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கேற்ப உடல் ஆரோக்கியத்துடன் வாழ விளையாட்டு மிகவும் முக்கியம். எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விளையாட்டு மைதானத்தை மீட்டுத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.