May 24, 2017 தண்டோரா குழு
ஆசிட் வீச்சால் தனது வாழ்க்கை முழுவதும் உருக்குலைந்து போய்விட்டது என்று நினைத்திருந்த பெண்ணுக்கு காதல் திருமணம் மூலம் புது வாழ்வு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரை சேர்ந்தவர் லலிதா பென் பான்சி(26).கடந்த 2௦12ம் ஆண்டு, தனது உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்,கோபம் கொண்ட அந்த உறவினர், லலிதாவின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். இதனால் அவருடைய முகம் முழுவதும் சிதைக்கப்பட்டது.
உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு 17 அறுவை சிகிச்சை செய்தனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அந்த சமயத்தில், தவறான தொலைபேசி எண் ஒன்று அவருக்கு வந்துள்ளது. அந்த எண் யாருடையது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக, மீண்டும் அழைத்துள்ளார்.
மும்பையின் கண்டிவில்லி நகரை சேர்ந்த ரவி ஷங்கர்(27) என்பவருடையது என்று தெரிந்துக்கொண்டார். இவர்களிடைய நட்பு உண்டாகி, அது காதலாக மாறி, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணம் நேற்று(மே 23) தானே நீதிமன்றத்தில் நடந்தது.
ஷங்கர் மும்பை நகரின் கண்டிவிலி என்னும் இடத்திலுள்ள சிசிடிவி ஆப்பரேடராக பணிபுரிந்து வருகிறார். ராஞ்சி நகரிலுள்ள ஒரு பெட்ரோல் பம்பின் உரிமையாளரும் கூட.
“ஆசிட் வீச்சால் வாழ்க்கை உருக்குலைந்து போய் விட்டதே என்று முடங்கி கிடந்த இருந்த வேளையில், தவறான தொலைபேசி எண் மூலம் ஷங்கருடைய நட்பு கிடைத்து. அதுவே என் வாழ்கையை முற்றிலும் மாற்றிவிட்டது” என்று லலிதா கூறினார்.
“எனக்கு அவளை தொடக்கத்திலிருந்து பிடித்துவிட்டது. லலிதாவை என் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தை குறித்து என் தாயாரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மும்பையில் வசிப்பதா அல்லது ராஞ்சிக்கு குடிபெயர்வதா? லலிதாவின் விருப்பத்தை கேட்டு முடிவு செய்வோம்” என்று ஷங்கர் தெரிவித்தார்.